பிளிப்கார்ட்டின் 77 சதவீதப் பங்குகளை வால்மார்ட் வாங்கியதை அறிவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட வால்மார்ட் நிறுவனத்தின் சிஇஓ டாக் மெக்மில்லன் (வலது) மற்றும் பிளிப்கார்ட் சிஇஓ பின்னி பன்சால் - AFP
ளிப்கார்ட் நிறுவன 77 சதவீத பங்குகளை வால்மார்ட் வாங்கியதுதான் இந்த மாதத்துக்கான முக்கியமான செய்தி. ஆனால் அனைவரும் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்கத் தவறுகின்றனர். இந்திய நிறுவனத்தை வாங்க இரு அமெரிக்க நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. இதனால் இந்திய வாடிக்கையாளர்களுக்கு பலன் கிடைக்கும் என்னும் செய்தி வெளியாகிறது. மறுபுறம் புத்தகங்களுடன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது 2,100 கோடி டாலர் நிறுவனமாக மாறி இருக்கிறது என ஊடகங்கள் கூறி வருகின்றன. தேசியவாதிகள் ஒரு இந்திய நிறுவனத்தை வெளிநாட்டு நிறுவனம் எப்படி வாங்கலாம் என கருத்து தெரிவிக்கின்றனர். பொருளாதார அறிஞர்கள் இது இந்தியாவுக்கான காலம் என கூறுகின்றனர். அந்நிய முதலீடுகளால் வேலை வாய்ப்பு உருவாகும் என கருத்து தெரிவிக்கின்றனர். இந்த முதலீடு இந்திய ஸ்டார்ட் அப் துறையினருக்கு உத்வேகத்தை கொடுத்திருக்கிறது. வருமான வரித்துறையினர் இந்த இணைப்பின் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்னும் நோக்கத்தில் பணியாற்றி வருகின்றனர். இது போல இந்த முதலீட்டினை ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்றதுபோல புரிந்துகொள்கின்றனர்.
மேலே இருக்கும் அனைத்தும் உண்மை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் மே 9-ம் தேதி வால்மார்ட் செய்த முதலீடு ஒரு முக்கியமான மைல் ஆகும். இதன் மூலம் இந்தியாவுக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை அனைவரும் கவனிக்க தவறிவிட்டனர். அமேசான் நிறுவனத்தை விட வால்மார்ட்டுக்கு சில சாதகங்கள் இருக்கிறது. இதன் மூலம் சில்லறை வர்த்தகத்துறை பலமடையும். வால்மார்ட் நிறுவனத்தின் குளிர்சாதன பதப்படுத்தும் வசதி (cold chain) 28 நாடுகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. காய்கறிகள் மற்றும் பழங்களை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். இதன் மூலம் இவை கெட்டுப்போகாமல் பார்த்துக்கொள்ள முடியும். உணவுப்பொருட்கள் அதிகம் வீணாகும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உணவுப்பொருட்களை பாதுகாக்கும் தொழில்நுட்பம் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களிடம் இல்லை. இதனை பிரதி எடுக்கும் வல்லமையும் மற்ற நிறுவனங்களுக்குக் கிடையாது.
கடந்த பத்தாண்டுகளில் வால்மார்ட் இந்தியாவில் 21 மொத்த விலை கடைகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் 10 லட்சம் சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு பொருட்களை சப்ளை செய்கிறது. இந்த இணைப்பின் மூலம் தற்போது சில்லறை வர்த்தக நிறுவனங்கள் மூலம் விவசாய பொருட்களை கொண்டு செல்ல திட்டமிட்டிருக்கிறது. இதில் சிறு கடைகளின் பொருள் நிர்வாகம், டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் தொழில்நுட்பம் ஆகியவற்றை மேம்படுத்த வால்மார்ட் திட்டமிட்டிருக்கிறது. இ-காமர்ஸ் துறையில் நடந்த மாற்றம் மூலம் இந்திய விவசாய துறை மற்றும் சில்லறை வர்த்தக நிறுவனங்களில் பெரிய மாற்றம் நிகழும்.
பிளிப்கார்ட் பங்குகளை வாங்குவதுடன், மேலும் 500 கோடி டாலர் தொகையையும் இந்தியாவில் முதலீடு செய்ய இருக்கிறது. இதன் மூலம் 1 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது வால்மார்ட் செயல்பட்டு வரும் முறையில் 97 சதவீதம் இந்திய பொருட்கள் என்பதால் கொள்முதல் செய்கிறது. தவிர 400 கோடி டாலர் வரை தங்களுடைய சர்வதேச தேவைக்காக ஏற்றுமதி செய்கிறது. இனி வரும் காலத்தில் வால்மார்ட் ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும். (ஒரு கோடி புதிய வேலை வாய்ப்புகள் என்பது மறைமுக வேலை வாய்ப்புகளையும் உள்ளடக்கியதுதான். விற்பனையாளர், லாஜிஸ்டிக்ஸ் விநியோகம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் கீழ் இந்த வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என கணிக்கப்பட்டிருக்கிறது.)
ஒரு கிலோ உருளை கிழங்கு மூலம் விவசாயிக்கு கிடைக்கும் தொகை ரூ.5 மட்டுமே. ஆனால் நாம் 20 ரூபாய்க்கு மேலே கொடுத்து வாங்குகிறோம். இடையில் பல கட்டங்களாக உருளை கிழங்கின் விலை அதிகரிக்கிறது. வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் இருக்கும்பட்சத்தில் விவசாயிகளுக்கு கிடைக்கும் விலைக்கும் சந்தையில் விற்பனையாகும் விலைக்கும் இடையேயான வித்தியாசம் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விவசாயிகளுடன், விற்பனை நிறுவனங்களுடன் ஒப்பந்தம்போட்டுக்கொள்வதால் கூடுதல் வருமானம் கிடைக்கிறது.
இதனால் இடைத் தரகர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் என்பது உண்மைதான். ஆனால் அவர்களுக்காக பரிதாபப்படமுடியாது. இடைத்தரகர்கள் ஒன்றாக இணைந்து செயற்கையாக விலையை குறைத்து விவசாயிகளை சுரண்டுபவர்கள் மீது எப்படி இரக்கம் காண்பிக்க முடியும். விவசாயிகள் விதைத்து அறுவடை செய்து, பல மைல் தூரம் விளைபொருளை கொண்டு வரும் போது குறைந்த விலையிலே இடைத்தரகர்கள் பெற்றுக்கொள்கின்றனர். விவசாய பொருட்களை பாதுகாக்க முடியாது என்பதால்தான், செயற்கையாக விலையை குறைக்கின்றனர்.
இவற்றை தடுப்பதற்கு அரசு சில நடவடிக்கைகள் எடுத்தாலும் செயல்படுத்துவதில் முழுமையடைவில்லை. இதற்காக வேளான் உற்பத்தி சந்தை குழுவினை (ஏபிஎம்சி) மத்திய அரசு கொண்டுவந்தது. ஆனால் சில மாநிலங்களில் மட்டுமே செயல்படுகிறது. அரசாங்கம் வாக்குறுதிகள் மட்டும் சட்டங்களை மட்டுமே இயற்ற முடியும். ஆனால் வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் குளிர்சாதன கிடங்கினை அமைக்க முடியும். இதன் மூலம் விளைச்சலுக்கு பிறகு விவசாயிகளுக்கு எந்த செலவும் இருக்காது.
விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்த வேண்டும் என பிரதமர் நினைத்தால், பாஜக ஆளும் மாநிலங்கள் ஏபிஎம்சியை ரத்து செய்வது குறித்து பேச வேண்டும். ஊழலை ஒழிக்க வேண்டும், விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக்க வேண்டும் என்னும் வாக்குறுதியை நிறைவேற்ற இதனை செய்ய வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் யாரிடம் வேண்டுமானாலும் பொருட்களை விற்கலாம் என்னும் சூழ்நிலை உருவாகும். வால்மார்ட் செய்த முதலீட்டின் பயனை அப்போதுதான் இந்தியா பெற முடியும்.